இலையுதிர்க்காலக் குறிப்புகள்
மரங்கள் நாம்
உதிர்ந்த இலைகளில் நான்
உன்னைப் பார்க்கிறேன்-நீ என்னைப் பார்க்கிறாய் .
ஆனால் உதிர்ந்துக் கிடப்பது என்னவோ நமது உறவு தானே!
உண்மையில் நீயும் நானும் சலனமற்று அடுத்த வசந்தத்தை
எதிர்நோக்கி நிற்கும் பின் நவீனத்துவ மரங்கள்.
இது நான் சொன்னது!
இது நான் சொன்னது!
நீ சொன்னாய்;
உதிர்ப்பதும் புதியதாய் உடுத்திக்கொள்வதும் நமக்கு இயல்புதானே;
நாம் ஒன்றும் நீ சொல்வதுபோல் பின் நவீனத்துவ மரங்கள் இல்லை.
மரங்கள்!.
இயற்கையோடு இசைந்து வாழும் மரங்கள்!.
காலம் கனிந்த பின்;
உறவின் பசுமை வெளிரியப் பின்,
உதிர்ப்பது உலக நியதி தானே!.
எனவே நாம் மரங்கள். இயல்பு மாறா மரங்கள்;
எல்லா மரங்களைப் போலவும்.
*********************************************************************************
உதிர்த்தல்
சில மரங்கள்
இலையுதிர்க்காலத்தின் அறிகுறிகள் தென் பட்டதுமே
வெட்கி
முகம் சிவந்து
மூப்படைந்து
இலையுதிர்த்து
இளம் வயது பெண் புத்த பிக்குகள் போல துறவு பூள்கின்றன !
சில மரங்கள்,
இலையுதிர்க்காலம், நான் வந்தது தெரியவில்லையா?.
உன் இலைகளைக் களை
என்று கொஞ்சலாய் சொல்லி பார்த்தாலும்;
இல்லை, நான் முடியப்போகிறேன்; சீக்கிரம் உதிர்க்கிறாயா? இல்லையா?? என்று மிரட்டிப்பார்த்தாலும்;
இலையை உதிர்க்க மனமே இல்லாமல்,
குறைச்சம்பள நடுத்தர வர்க்கக் குடும்பத் தலைவன்
தன் வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டுக்குச் சொந்தக்காரனிடம் வாடகையை இதோ தருகிறேன் அதோ தருகிறேன் என்று போக்கு காட்டுவானே- அது போல கண்ணாமூச்சி ஆடிகொண்டிருக்கின்றன!
*******************************************************************************
மேப்பிள்ளன்னை அளித்த ஞானம் (Wisdom from Mother Maple)
வீட்டின் முன் நின்று
பச்சை சிவப்பு மஞ்சள் வண்ணங்களிலான இலைகளைச் சூடி நின்ற இரண்டு மேப்பிள் மரங்களுடன் புகைப்படம் எடுக்க நினைத்தேன்.
நேரம் அமையவே இல்லை.
நாளை நாளை என்று நாட்கள் கழிந்தன. - ஆனால் ஒரு வாரத்திற்குள்
என் வீட்டு மேப்பிள்ளன்னை இலைகளை உதிர்த்துவிட்டு
துறவு பூண்டு விட்டாள்
அவளை நான் என்னென்பது!- அன்னையாயிற்றே!
இப்படித்தான் கழிகிறது
வாழ்வின் ஒவ்வொரு மகிழ்ச்சிக்கான திட்டமிடுதலும்
நாளை நாளை என்று!
என்று தான் வாழப் போகிறானோ அல்லது
இப்படியே வாழ்ந்துவிட்டு
தோச்தொவேச்கி (Dostoevesky) இந்த முழுமையற்ற தன்மையைத்தான் வாழ்க்கை என்று சொன்னான் என்று அவன் புராணம் பாடப் போகிறேனோ தெரியவில்லை!
வாழ்க்கை என்று சொல்வார்களே
அதன் பின்னோ ஓடுகின்றேனோ? - அல்லது,
அது துரத்திகொன்டிருப்பதால் ஓடுகின்றேனோ?
விடை தெரியவில்லை.
அடுத்த இலையுதிர்காலத்திற்குள் கண்டு பிடித்து விடுவேன் என்று நினைக்கிறேன்!
*******************************************************************************
நன்றி !
ப்ரியங்களுடன்,
அருண்



No comments:
Post a Comment