தமிழ் அன்னை
ஓர் சோம்பல் மிகுந்த சனிக்கிழமை மதியம் மூன்று மணி வாக்கில் மோன்ட்ரியல் பாதாள மெட்ரோவில் பயணிக்க நேர்ந்தது. வழக்கமாக இரவுகளில் மாத்திரமே நான் வெளியில் செல்வது வழக்கம். அன்று உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல வேண்டியிருந்ததால் இந்தப் பயணம் . ஆரஞ்சு வழித்தடமும் பச்சை வழித்தடமும் சந்திக்கும் சந்தியில் ஒரு பெண்மணி இரண்டு பிள்ளைகளுடன் ஏறினாள். பையனுக்கு 8 வயதும், பெண்பிள்ளைக்கு 5 வயதும் இருக்கலாம். அமர்ந்தவுடன் பையனுக்கு ஹென்சல் அண்ட் க்ரெடெல்லை கொடுத்த படிக்க வைத்தார். பெண்ணுக்கு அவர் மடியிலே புத்தகத்தை வைத்து அம்மா, ஆடு, இலை புத்தகத்தை வைத்து தமிழ் சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நெகிழ்ச்சியாய் இருந்தது. தமிழ்ப் புத்தகம் ஹென்சல் அண்ட் க்ரெடெல்லுக்கு முன்னோட்டமாக இருக்கக்கூடும். தமிழ் பத்திரிகை படித்ததால் அம்மாவிடம் அடி வாங்கி தமிழே படிக்கத் தெரியாமல் ஹிந்தியை முதன்மை பாடமாக எடுத்து படித்து M.Sc., வரை வந்து படித்த என் நண்பர்கள் நினைவுக்கு வந்தார்கள். கண்டிப்பாக அவர்களுக்கு டின் டின் காமிக்ஸுக்கு முன் இப்படி ஒரு முன்னோட்டம் கூட நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.பிறிதொரு சமயம் வழக்கமாக மளிகை வாங்கும் வங்காளதேசத்தை சேர்ந்தவரின் மகனான இம்தியாசை சந்திக்க நேர்ந்தது. அவனிடம் பெங்காலியில் "கெமொன் அச்சிஸ்" என்று நான் கேட்க, அவனின் அப்பா "பாலோ அச்சி, போல் (நல்லா இருக்கேன்னு சொல்லு)" என்று மொழி பெயர்த்தார். "சாரி ப்ரதர் இம்தியாசுக்கு பிரெஞ்சு மட்டுமே பேச வரும்" என்று இம்தியாஸின் அப்பா கூறுகையில் அவர் முகத்தில் இருந்தது கூச்சமா பெருமையா என்று என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. மெட்ரோ ரயிலில் பார்த்த அந்தப் பெண்மணியை நினைத்துக் கொண்டேன். அந்தக் குழந்தைகள் அழகாகவே தமிழில் பேசினர். தமிழும் படித்தனர்.