Friday, December 14, 2012

ஸ்டிங்-ஓர் ஆயிரம் ஆண்டுகள் (Sting-One thousand Years)



ஸ்டிங்(Sting) -கின் அதி தீவிரமான விசிறி நான் ( Die Hard fan). அந்த இசைக் கலைஞனை எனக்கு பிடிக்கும்; அதைவிட அவனில் உள்ள அந்த மனிதனை மிகவும் பிடிக்கும். அவனின் பாடல்கள் மிக ஆழ்ந்த கவித்துவமும்; மிக ஆழமான அர்த்தமும் கொண்டவை. எல்லா தரப்பு மனிதர்களுக்காகுமான கலைஞன். இனம் மொழி மதம் அனைத்தயும் கடந்தக் கலைஞன். இவரது Desert Rose , Message in a  bottle, Roxxane  போன்ற பாடல்கள் மிகப் பிரபலம். தினமும் பத்து கிலோமீட்டர் ஓட்ட பயிற்சியும் யோகாவும்  60 வயதுக்காரனாக இருந்தாலும் இருபத்தைந்து வயதுகாரனுக்கான தோற்றத்தை தருவதை கவனிக்கலாம்.இயற் பெயர் (Gordon thomas Mathew Sumner) என்பது  நியூ காஸ்ட்லே என்ற இங்கிலாந்து நாட்டில் ஒரு படகுத்துறையில் பொறியாளராக இருந்தவருக்கு மகனாக பிறந்தவர். "ஓர் ஆயிரம் ஆண்டுகள்" என்ற இந்த பாடலை எப்போது கேட்டாலும் ஒரு துயரம் வந்து நெஞ்சை நிரப்பி விடும். அலாதியான அனுப்வம் அது. இந்தப் பாடலை முயற்சி செய்யுங்கள்.



"A million roads, a million fears
A million suns, ten million years of uncertainty 
I could speak a million lies, a million songs,
A million rights, a million wrongs in this balance of time
But if there was a single truth, a single light
A single thought, a singular touch of grace
Then following this single point , this single flame,
The single haunted memory of your face

I still love you 
I still want you
A thousand times the mysteries unfold themselves 
Like galaxies in my head"

                                                         - Sting ( One Thousand Years )

இனி மிச்சமிருக்கும்  காலங்களில் 
ஒரு கோடி பாதைகளில் பயணிக்கலாம் 
ஒரு கோடி பயங்களுடன் சல்லாபம் செய்யலாம் 
ஒரு கோடி சூரியன்களைக் காணலாம்  
பல கோடி உறுதியில்லாத் தன்மையோடு வாழலாம்    
ஒரு கோடி பொய்களைப் பேசலாம் 
ஒரு கோடி பாடல்களைப்  பாடலாம் 
ஒரு கோடி சரியான விசயங்களையும் 
ஒரு கோடி தவறுகளையும் புரியலாம் 

ஒர்  ஒற்றை உண்மைச் சொல்லோ 
ஓர்  ஒற்றை எண்ணமோ 
ஓர் ஒற்றை ஒளிக்கீற்றோ  
ஓர் ஒற்றை இரக்கமோ இருக்கும் பட்சத்தில் 
அந்தப் புள்ளியிலிருந்து 
அந்த எரியும் சுடரிலிருந்து 
என் நினைவில் தங்கி என்னை ஆட்கொண்டிருக்கும் உன் முகச்  சாயல் ஞாபகத்திலிருந்து

நான் உன்னை இப்போதும் நேசிக்கிறேன் 
இப்போதும் நீ எனக்குத்  தேவை  

பல பால்வழித் திரள்களின் ரகசியங்களைப் போல 
பல்லாயிரம் மடங்கு பூட்டி வாய்த்த ரகசியங்கள் உடைபடுகின்றன 
என் ஆழ் மனதில்!

(என் தோராயமான மொழிபெயர்ப்பு)







இந்த பாடலின் தமிழ் வடிவத்தை இந்த சுட்டியை கிளிக்கிக் கேளுங்கள். மிக அழகாக காப்பி அடித்திருப்பார் "தினா". ஆபாசமான வரிகளைப் பாட மாட்டேன் என்று சொன்னதால் மார்க்கெட் இழந்ததாகச் சொல்லப்படும் உன்னி கிருஷ்ணன் இது போன்ற பாடல்களையும் தவிர்த்திருக்கலாம் தானே.






அன்பின்,
அருண் 
1:20pm 15th டிசம்பர் 2012.

Friday, November 9, 2012

குளிர்கால நிகழ்வுகள்





இலையுதிர் காலம் தனது பணியை செவ்வனே முடித்து விடைப் பெற்று விட்டது. குளிர்காலம் தனது தாண்டவத்தை நிகழ்த்தத் தொடங்கி இருக்கிறது. முன்புப் போல வெறும் சட்டையணிந்து வெளியே செல்ல முடியவில்லை. பெரிய இறுக்கமான கோணிப்பையைக் கட்டி வைத்தால் போல கம்பளி ஆடை அல்லது மழைக்கோட்டு அணிந்து மாத்திரமே வெளியே கால் வைக்க முடிகிறது. இத்தனைக்கும் -1 லிருந்து  -4 க்குள்ளாக மாத்திரமே வெப்பநிலை. இன்று காலை இதமாக இருந்தது வெளியில் பஸ் பிடிக்க நடக்கையில்  நேற்று இருந்ததை விடவும் குளிர்  சற்றுக்  குறைந்து இருந்தது. அப்புறம்தான் தெரிந்தது வெப்பநிலை 5C என்று. என்ன சொல்வது 44C வெப்பநிலையில் வளர்ந்த எனக்கு எப்படியோ இந்த வெப்பநிலை பழகி விட்டது என்று நினைக்கையில் ஆச்சர்யமாக இருந்தது.நிறைய நம்ம ஊர்க் காரர்களும் இங்குண்டு அவர்களும் என்னைப் போலவே அவ்வாறே நினைக்கக்கூடும். நேற்று காலை அவசரமாக புறப்பட்டு  நான்குக் கால் பாய்ச்சலில் பேருந்து நிறுத்தத்தை அடைந்ததுதான் தாமதம் தாரை தாரையாக அந்த மைனஸ் இரண்டிலும் வேர்வை ஊற்றுகிறது. எல்லோரும் என் மீது  வேற்று கிரகத்திலிருந்து வந்தவன் போல ஒரு விநோதப் பார்வையை வீசினார்கள். நான் அவர்களை மதியாது ஒரு சீனத்து மஞ்சள்  பேரழகியை சைட் அடித்துக்கொண்டிருந்தேன். அப்புறம் தான் தெரிந்தது வரும்போது அவசரத்தில் குளிர்கால ஈரப்பதக் க்ரீமை எக்ஸ்ட்ரா லேயராக போட்டு என் வியர்வைத்  துவாரங்களை எல்லாம் அடைத்து விட்டேன் என்பது. பேருந்து வழக்கம் போலவே ரெண்டு நிமிடம் முன்னதாகவே வந்து நின்றவர்களை எல்லாம் உள்ளே அனுமதித்து விட்டு ஓடிவரும் பயணிகளுக்காகக்  காத்திருக்கதொடங்கினாள். வழக்கம்போலவே எல்லோரும் தத்தம் Blackberry யிலும், android, iphone வகையறாக்களிலும் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டும் இசையை ரசித்துக்கொண்டும் பிஸியாக இருந்தனர். நான் மாத்திரமே பிதாமகன் விக்ரம் இரயிலில்  பயணிக்கையில் நகரும் காட்சிகளை ஆச்சர்யத்துடன் பார்ப்பானே அதுபோல வெளியில் வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். அவர்கள் என்னை கற்காலத்து மனிதன் என நினைத்திருக்கக்கூடும்.

போகும் வழியில் உள்ளச் சிறியக் குட்டை முழுவதுமாக மேற்பரப்பில் மாத்திரம் ஒரு மெல்லிய ஐஸ் படலமாக உறைந்து கிடந்தது. பாவம் வாத்துகள் குட்டையின் அருகே வந்து நின்றுவிட்டு உறைந்த நீரைக்கண்டு  பிள்ளையும் குட்டியுமாக ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருந்தன. இலைகளையில்லாம் இழந்துவிட்டு மரங்கள் வெற்றுடம்புடன் குளிர்காலத் தவத்தை ஆரம்பித்துவிட்டன. இந்தக் குளிரிலும் வளர்ப்பு நாய்களைக்  கூட்டிக்கொண்டு  வயதான மற்றும் நடுத்தர வயதுப் பெண்மணிகள் நடைபாதைகளில் நடந்து கொண்டிருந்தார்கள் பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தது. பாவம் அதுகள் எவ்வளவு  நேரத்துக்குதான் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்குங்கள். கோடைக் கால தூசுக்கள் எல்லாம் அடங்கி காற்று சுத்தமாக இருக்கிறது.  நன்றாகத் தான் இருக்கிறது குளிர்காலம். எல்லாவற்றுக்கும் ஒரு காலம் இருக்கிறது இல்லையா. அது போலவே எல்லா காலத்துக்கும் ஒரு காலம் உண்டு. குளிர் காலப் பனிமழையை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு இனிமையானத் தருணமாக அது இருக்கும். ஒவ்வொரு காலமும் அழகு தானே. ஏன் அவற்றை சபிக்க வேண்டும். 

Sunday, October 28, 2012

வித்யாசாகர்- ஒரு நல்ல இசைக்கலைஞன்




எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் வித்யாசாகர். வித்யாசாகர் ஒரு வித்தியாசமான; முக்கியமான இசைத்திறமை. எனக்குத் தெரிந்து அவர் இசையமைத்த எல்லா திரையிசைத்  தொகுப்புக்களும் வெற்றி பெற்றவை. அது ஜெய் ஹிந்தாக இருக்கட்டும் ராமன் தேடிய சீதையாக இருக்கட்டும் சந்திரமுகியாக இருக்கட்டும்.பிரமாதமாக இருக்கும் அவரின் மேலோடிக்கள். அவருடைய "மலரே மௌனமா" (கர்ணா) பாடலை இன்றுவரை மறக்க முடியாது. அர்ஜுன் மட்டுமே ஆரம்பக் காலத்தில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்துள்ளார். அதற்கப்புறம் தில், தூள், மஜா, மதுர, என பல ஹிட் படங்கள். ரொம்ப நாளைக்கப்புறம் சிறுத்தை, காவலன் என்று வந்து ஹிட் கொடுத்து விட்டு மறுபடியும் மலையாளத்துக்கு எஸ்கேப். இப்போது அவரை தமிழ் பக்கம் அதிகமாக பார்க்கவே முடிவதில்லை. மலையாளப் படங்களில் கலக்கிக்  கொண்டிருக்கிறார். "Diamond Necklace" என்ற லால் ஜோஸ் இயக்கி பாஹாத் பாசில் நடித்த படத்தில் இடம்பெற்ற  இந்த "நிலா மலரே" என்ற பாடலை கேட்காமல் எனது சமீத்திய நாட்கள் கழிவதில்லை.  நிவாஸ்(a) ஸ்ரீனிவாசன் ரகுநாதன் (http://singersrini.com/index.html) என்கிற பாடகர் பாடியுள்ளார்; என்ன அருமையான ரீங்காரம். ஏர்டெல்  சூப்பர் சிங்கேரில் சீசன் 3ல் பாடியுள்ளதாக கேள்வி.  நல்ல எதிர்காலம் உண்டு. யார் கண்டார்கள், பெயரில் நிவாஸ்-ஐ கொண்டிருப்பதாலேயே PB ஸ்ரீநிவாஸ் போலக் கூட ஆகலாம். வாழ்த்துக்கள். Fahadh  Fazil, டைரக்டர் பாசிலின் (காதலுக்கு மரியாதை, அரங்கேற்ற வேலை, வருஷம் 16) மகன். நல்ல அசத்தலான திறமையும் எளிமையும் ஒருங்கே அமைந்த  எனக்கு மிகவும் பிடித்த நடிகன். கண்டிப்பாக ஒரு ரவுண்டு வருவான். அருமையான படம் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் நேரமிருந்தால் விமர்சனம் எழுதலாம் என்றிருக்கிறேன்!. பார்க்கலாம்.





எனக்குப்  பிடித்த 10 வித்யாசாகர் பாடல்கள் (தரவரிசை அல்ல) பின் வருமாறு, 

1. காற்றின் மொழி (பல்ராம், மொழி). 
2. பொய் சொல்லக் கூடாது காதலி( ஹிஹரன், சாதனா சர்கம். ரன்).
3. பூவாசம் (சாதனா சர்கம், ஸ்ரீராம் பார்த்தசாரதி (அ ) விஜய் பிரகாஷ்,  அன்பே சிவம்).
4. கொஞ்ச நேரம் (ஆஷா போன்ஸ்லே, மது பாலகிருஷ்ணன், சந்திரமுகி)
5. நீயா பேசியது (ஷங்கர் மகாதேவன், திருமலை)
6. அழகூரில்  பூத்தவளே (SPB, சுஜாதா மோகன், திருமலை)
7. நான் மொழி அறிந்தேன் (சுரேஷ் வட்கர், கண்டேன் காதலை)
8. இப்பவே இப்பவே (ஹரிணி, மது பாலகிருஷ்ணன், ராமன் தேடிய சீதை)
9.  ல ள ல இனியவளே (SPB, பொய்) 
10. அடி தோழி அடி தோழி (கல்யாணி, தென்றல்).


இந்தப்  பாடல்களை பின்வரும் வலைத்தளத்தில் Jukebox-ல் கேட்டு மகிழவும். http://www.paadal.com/composer/vidyasagar (அகர வரிசைப்படி அணைத்துப் படங்களும்). இந்த பாடல்.காம் ( http://www.paadal.com/ ) தமிழ்ப் படப் பாடல்களுக்கான ஒரு மிகச்சிறந்ததொரு  வலைத்தளம். எல்லாவற்றையும் நீங்கள் இங்கே பெறலாம். 

தங்கர் பச்சானின் தென்றல் படத்தில் இடம்பெற்ற "அடித் தோழி" என்ற இந்தப் பாட்டு  எப்போதும் கேட்ட மாத்திரத்தில் மனசு லேசாகிவிடும்.  எனக்கு ஒரு டைரக்டர் ஆகவேண்டுமென்பது நெடுநாள் கனவு. ஒருவேளை தப்பித்தவறி ஆகிவிட்டால் நான் பணி  புரிய விரும்பும் இசையமைப்பளர்களில் (ராஜா, ரெஹ்மான், யுவன், மணி ஷர்மா, ஹாரிஸ், தேவிஸ்ரீ உள்ளிட்ட பட்டியலில்) கண்டிப்பாக வித்யாசாகருக்கு இடம் உண்டு. பயப்படாதீர்கள் நான் திரைப்படம் எடுப்பதற்கான வாய்ப்பு எப்படி எனில் ஒரு சுருள் முடிகொண்ட சீனாக்காரனையோ; சீனக்காரியையோ  (Curly Haired Chinese) பார்ப்பதற்கு ஒப்பானது. கண்டிப்பாக நடக்காது/பார்க்க முடியாது . எப்படியோ, வித்யாசாகர் இன்னும் பல  நல்ல பாடல்களை தருவார், கண்டிப்பாக.    

Tuesday, October 16, 2012

இலையுதிர்க்காலக்  குறிப்புகள் 





மரங்கள் நாம்    


உதிர்ந்த இலைகளில் நான்  
உன்னைப் பார்க்கிறேன்-நீ என்னைப் பார்க்கிறாய் .
ஆனால் உதிர்ந்துக்  கிடப்பது என்னவோ நமது உறவு தானே!

உண்மையில் நீயும் நானும் சலனமற்று அடுத்த வசந்தத்தை   
எதிர்நோக்கி நிற்கும் பின் நவீனத்துவ மரங்கள்.
இது நான் சொன்னது!

நீ சொன்னாய்;
உதிர்ப்பதும் புதியதாய் உடுத்திக்கொள்வதும்  நமக்கு இயல்புதானே; 
நாம் ஒன்றும் நீ சொல்வதுபோல் பின் நவீனத்துவ மரங்கள் இல்லை.
மரங்கள்!.
இயற்கையோடு இசைந்து வாழும் மரங்கள்!. 
காலம் கனிந்த பின்; 
உறவின்  பசுமை வெளிரியப் பின்,
உதிர்ப்பது உலக நியதி தானே!.

எனவே நாம் மரங்கள். இயல்பு மாறா மரங்கள்; 
எல்லா  மரங்களைப்  போலவும். 

*********************************************************************************





உதிர்த்தல் 


சில மரங்கள்
இலையுதிர்க்காலத்தின் அறிகுறிகள் தென் பட்டதுமே
வெட்கி
முகம் சிவந்து
மூப்படைந்து
இலையுதிர்த்து
இளம் வயது பெண் புத்த பிக்குகள் போல துறவு பூள்கின்றன !

சில மரங்கள்,
இலையுதிர்க்காலம், நான் வந்தது தெரியவில்லையா?.
உன் இலைகளைக் களை
என்று கொஞ்சலாய் சொல்லி பார்த்தாலும்;
இல்லை, நான் முடியப்போகிறேன்;  சீக்கிரம் உதிர்க்கிறாயா? இல்லையா?? என்று மிரட்டிப்பார்த்தாலும்;
இலையை உதிர்க்க மனமே இல்லாமல்,
குறைச்சம்பள நடுத்தர வர்க்கக் குடும்பத் தலைவன்
தன் வாடகைக்குக்  குடியிருக்கும் வீட்டுக்குச்  சொந்தக்காரனிடம் வாடகையை  இதோ தருகிறேன் அதோ தருகிறேன் என்று போக்கு காட்டுவானே- அது போல கண்ணாமூச்சி ஆடிகொண்டிருக்கின்றன!

*******************************************************************************




மேப்பிள்ளன்னை அளித்த ஞானம்   (Wisdom from Mother Maple) 


வீட்டின் முன் நின்று
பச்சை சிவப்பு மஞ்சள் வண்ணங்களிலான இலைகளைச்  சூடி நின்ற இரண்டு மேப்பிள் மரங்களுடன் புகைப்படம் எடுக்க நினைத்தேன்.
நேரம் அமையவே இல்லை.
நாளை நாளை என்று நாட்கள் கழிந்தன. - ஆனால் ஒரு வாரத்திற்குள்
என் வீட்டு மேப்பிள்ளன்னை இலைகளை உதிர்த்துவிட்டு
துறவு பூண்டு விட்டாள்
அவளை நான் என்னென்பது!- அன்னையாயிற்றே!

இப்படித்தான் கழிகிறது
வாழ்வின் ஒவ்வொரு மகிழ்ச்சிக்கான திட்டமிடுதலும்
நாளை நாளை என்று!

என்று தான் வாழப் போகிறானோ அல்லது
இப்படியே வாழ்ந்துவிட்டு
தோச்தொவேச்கி (Dostoevesky) இந்த  முழுமையற்ற தன்மையைத்தான்  வாழ்க்கை என்று சொன்னான் என்று அவன் புராணம் பாடப்   போகிறேனோ  தெரியவில்லை!

வாழ்க்கை என்று சொல்வார்களே
அதன் பின்னோ ஓடுகின்றேனோ? - அல்லது,
அது   துரத்திகொன்டிருப்பதால் ஓடுகின்றேனோ?
விடை தெரியவில்லை.
அடுத்த இலையுதிர்காலத்திற்குள் கண்டு பிடித்து விடுவேன் என்று நினைக்கிறேன்!

*******************************************************************************

நன்றி !

ப்ரியங்களுடன்,
அருண் 





Friday, September 21, 2012

ஸ்வர ராஜா  1

இளையராஜா அவர்களின் இசையின் ஊடாக அதில் ஊறி வளர்ந்த தலைமுறையை சேர்ந்தவன்  நான்.  என் வாழ்வின் கடினமான தருணங்களிளெல்லாம்  ராஜாவின் பாடல்கள் எனக்கு ஆறுதலும் தேறுதலும் தந்திருக்கிறது ( சுக ராகம் சோகந்தானே). என் வாழ்வில்  இன்றுவரை  மாறாத வெகு சில விசயங்களில் அவரின் இசையும் ஒன்று. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்ற  தருணங்களில் இளையராஜாவின் சில தெலுங்கு மொழி பாடல்களை கேட்க நேர்ந்தது. ஒரு நாள் மதிய உணவுக்குப்பின் மேற்கொள்ளும் வழக்கமான ஆழ்ந்த தூக்கத்திலிருந்து மிகப்பரிச்சயமான ஒரு பாடல் மனதை தட்டி எழுப்பிற்று. அது எமது  அறையிலிருந்த பிலிப்ஸ் ரேடியோவிலிருந்து ரேடியோ மிர்ச்சி பண்பலை வரிசையில்  ஒலி பரப்பான  "ஆனந்த ராகம் கேட்கும் நேரம்" என்ற பன்னீர்  புஷ்பங்கள் படத்தில் இடம்பெற்ற அற்புதமான பாடல் தெலுங்கில். இளையராஜா ராம் கோபால் வர்மா  இயக்கிய "சிவா "  படத்திற்காக (ஏ  ஊஹலனோ,  http://www.youtube.com/watch?v=nZIN6ZXdF9o) கொடுத்தது. மிக அற்புதமான அனுபவம் அது. அப்புறம் விசாரித்தால் தான் தெரிகிறது எப்படி நம்மூரில் ராஜாவுக்கு ஒரு உயரிய இடமுண்டோ அதே அளவில் ஆந்திரத்திலும் ஒரு சிம்மாசனம் உண்டென்பது. அவரை பிரியமாய் நாம் இங்கே இசை ஞானி என்று அழைப்பது போல் ஸ்வரராஜா என்று அழைக்கின்றனர். ஆந்திரா மக்கள்  ராஜாவை அவர்களில் ஒருவராகவும் (மனவாடு ) அவரை  அந்திரபிரதேசத்துக்காரர் என்றும்  பெருமை பட்டுக்கொண்டிருந்ததும் தெரிய வந்தது.  இசைக்கு மொழி/நாடு/இனம் என்று  உண்டா என்ன?.அவரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது தானே!.  சூப்பர் ஹிட் அடித்த பல தெலுங்கு மொழி பாடல்களை  அவர் தமிழில் மறு உருவாக்கம் செய்யவே இல்லை. உதாரணமாக கில்லெர் படத்தில் இடம்பெற்ற "பிரியா ப்ரியதமா ராகாலு" என்ற மனோ பாடிய பிரமாதமான பாடலை சொல்லலாம்.  பாரதிராஜா "கடலோரக் கவிதைகள்" படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும்  சுகாஷினி நடிக்க "ஆராதனா" என்ற பெயரில் எடுத்தார். "அடி ஆத்தாடி" பாடலை தெலுங்கில் " "அரே ஏமாய்ந்தி" என்று ராஜா கொடுத்திருப்பார். அந்த படம் வந்த போது  இந்த பாடலின் மாயப்பிடியில் ஆந்திரம் மொத்தமும்  கிறங்கிக் கிடந்தது. உதாரணமாய் ஒரு சம்பவம் ஒரு சமயம் கச்சேரியில் "அரே ஏமாய்ந்தி" என்று ஜானகி ஆரம்பிக்க எங்கிருந்தோ  ஒரு ரசிகர் ஓடி வந்து அவரின் காலில் நெடுக்க விழுந்து மெய்  சிலிர்த்து அழுதாராம். இளையராஜாவின் இசையில் கார்த்திக் மற்றும் சோபனா நடித்து வெளிவந்த "அபிநந்தனா" என்ற படத்தின் " பிரேமா எந்த மதுரம்" என்ற இந்த பாடல் எனக்கு   மிகவும் பிடித்த பல இளையராஜா இசைஅமைத்த தெலுங்கு பாடல்களில் ஒன்று. கேட்டு மகிழுங்கள் நான் மகிழ்ந்தது போலவே.