இலையுதிர் காலம் தனது பணியை செவ்வனே முடித்து விடைப் பெற்று விட்டது. குளிர்காலம் தனது தாண்டவத்தை நிகழ்த்தத் தொடங்கி இருக்கிறது. முன்புப் போல வெறும் சட்டையணிந்து வெளியே செல்ல முடியவில்லை. பெரிய இறுக்கமான கோணிப்பையைக் கட்டி வைத்தால் போல கம்பளி ஆடை அல்லது மழைக்கோட்டு அணிந்து மாத்திரமே வெளியே கால் வைக்க முடிகிறது. இத்தனைக்கும் -1 லிருந்து -4 க்குள்ளாக மாத்திரமே வெப்பநிலை. இன்று காலை இதமாக இருந்தது வெளியில் பஸ் பிடிக்க நடக்கையில் நேற்று இருந்ததை விடவும் குளிர் சற்றுக் குறைந்து இருந்தது. அப்புறம்தான் தெரிந்தது வெப்பநிலை 5C என்று. என்ன சொல்வது 44C வெப்பநிலையில் வளர்ந்த எனக்கு எப்படியோ இந்த வெப்பநிலை பழகி விட்டது என்று நினைக்கையில் ஆச்சர்யமாக இருந்தது.நிறைய நம்ம ஊர்க் காரர்களும் இங்குண்டு அவர்களும் என்னைப் போலவே அவ்வாறே நினைக்கக்கூடும். நேற்று காலை அவசரமாக புறப்பட்டு நான்குக் கால் பாய்ச்சலில் பேருந்து நிறுத்தத்தை அடைந்ததுதான் தாமதம் தாரை தாரையாக அந்த மைனஸ் இரண்டிலும் வேர்வை ஊற்றுகிறது. எல்லோரும் என் மீது வேற்று கிரகத்திலிருந்து வந்தவன் போல ஒரு விநோதப் பார்வையை வீசினார்கள். நான் அவர்களை மதியாது ஒரு சீனத்து மஞ்சள் பேரழகியை சைட் அடித்துக்கொண்டிருந்தேன். அப்புறம் தான் தெரிந்தது வரும்போது அவசரத்தில் குளிர்கால ஈரப்பதக் க்ரீமை எக்ஸ்ட்ரா லேயராக போட்டு என் வியர்வைத் துவாரங்களை எல்லாம் அடைத்து விட்டேன் என்பது. பேருந்து வழக்கம் போலவே ரெண்டு நிமிடம் முன்னதாகவே வந்து நின்றவர்களை எல்லாம் உள்ளே அனுமதித்து விட்டு ஓடிவரும் பயணிகளுக்காகக் காத்திருக்கதொடங்கினாள். வழக்கம்போலவே எல்லோரும் தத்தம் Blackberry யிலும், android, iphone வகையறாக்களிலும் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டும் இசையை ரசித்துக்கொண்டும் பிஸியாக இருந்தனர். நான் மாத்திரமே பிதாமகன் விக்ரம் இரயிலில் பயணிக்கையில் நகரும் காட்சிகளை ஆச்சர்யத்துடன் பார்ப்பானே அதுபோல வெளியில் வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். அவர்கள் என்னை கற்காலத்து மனிதன் என நினைத்திருக்கக்கூடும்.
போகும் வழியில் உள்ளச் சிறியக் குட்டை முழுவதுமாக மேற்பரப்பில் மாத்திரம் ஒரு மெல்லிய ஐஸ் படலமாக உறைந்து கிடந்தது. பாவம் வாத்துகள் குட்டையின் அருகே வந்து நின்றுவிட்டு உறைந்த நீரைக்கண்டு பிள்ளையும் குட்டியுமாக ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருந்தன. இலைகளையில்லாம் இழந்துவிட்டு மரங்கள் வெற்றுடம்புடன் குளிர்காலத் தவத்தை ஆரம்பித்துவிட்டன. இந்தக் குளிரிலும் வளர்ப்பு நாய்களைக் கூட்டிக்கொண்டு வயதான மற்றும் நடுத்தர வயதுப் பெண்மணிகள் நடைபாதைகளில் நடந்து கொண்டிருந்தார்கள் பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தது. பாவம் அதுகள் எவ்வளவு நேரத்துக்குதான் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்குங்கள். கோடைக் கால தூசுக்கள் எல்லாம் அடங்கி காற்று சுத்தமாக இருக்கிறது. நன்றாகத் தான் இருக்கிறது குளிர்காலம். எல்லாவற்றுக்கும் ஒரு காலம் இருக்கிறது இல்லையா. அது போலவே எல்லா காலத்துக்கும் ஒரு காலம் உண்டு. குளிர் காலப் பனிமழையை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு இனிமையானத் தருணமாக அது இருக்கும். ஒவ்வொரு காலமும் அழகு தானே. ஏன் அவற்றை சபிக்க வேண்டும்.

Really awesome anna
ReplyDelete